ஸ்வயம்வராலயா திரு ஜானகிராமன் – Thethiyur Vjraman

மறைந்த தேதியூர் எஸ் வி சாஸ்திரி (மிகப் பிரபல ஜோதிட சாத்திரம் அறிந்த ஞானி) என்றால் தெரியாதவர் இருக்க முடியாது. அவருக்கு மூன்று மகன்கள் திரு ஜானகிராமன், திரு மஹாதேவன் மற்றும் ராஜாராமன்.

 

நாங்கள் மேற்கு மாம்பலத்தில் சொந்தமாக ஒரு வீடு வாங்கி குடிபுகும் முன்பு பல்வேறு தெருக்களில் குடியிருந்தோம். 1980 களில் நாங்கள் மிகவும் பிரபலமான ஜெய்சங்கர் தெருவில் குடியிருந்த பொழுது எங்கள் எதிர் வீட்டில் தான் தேதியூர் – ஸ்வயம்வராலயா ஜானகிராமன் குடும்பத்தினர் குடியிருந்தனர். நான் மும்பை மற்றும் மஸ்கட் வேலைகளை நிறைவு செய்து விட்டு இனி எங்கு செல்வது என்ற குழப்பத்தோடு வந்து எங்கள் குடும்பத்தோடு இணைந்தவுடன் எனக்கு முதலில் அறிமுகம் ஆனவர் தான் அண்ணா என்று நான் அன்புடன் அழைக்கும் திரு ஜானகிராமன் அவர்கள்.

 

அறிமுகம் ஆன ஒரு சில நாட்களிலேயே என்னை எங்கள் வீட்டில் இருந்து ஒரு வீடு விட்டு அடுத்த வீட்டில் வசித்த மூத்த எழுத்தாளர் மறைந்த கலைமாமணி திரு விக்கிரமன் அவர்களிடம் என்னைக் கூட்டிச் சென்று அறிமுகம் செய்து வைத்து எனது முதல் கவிதை நூலாகிய ‘தலையுதிர்காலம்’ புத்தகத்திற்கு நல்லதொரு அணிந்துரை பெற்றுத் தந்தார். இன்னும் அந்த சந்திப்பு பசுமை நிறைந்தது. அதோடு நில்லாமல் அவர் செய்த் மிக முக்கியமான என்னால் மறக்க முடியாத நன்றியோடு என்றும் நினைத்துப் பார்க்கும் வேறு ஒரு விஷயம் உண்டு. அது தான் 1988 ஆம் ஆண்டு உரத்த சிந்தனை அமைப்பில் ஏற்கனவே ஆயுள் உறுப்பினராக இருக்கும் அவர் என்னை அவர்களின் ஆண்டு விழாவிற்கு அழைத்துப் போய் நண்பர் திரு உதயம் ராம் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து எனது எதிர்காலத்தை இலக்கிய உலகில் தொடங்கி வைத்தார். அதன் பிறகு எல்லாமே வரலாறு தான். அந்த வரலாறை எழுதியது நண்பர் ‘அண்ணா’ திரு ஜானகிராமன் அவர்கள்.

 

திரு ஜானகிராமன் அவர்கள் ஒரு ஆடிட் ஆபிசர். தொடர்ந்து டூரில் இருப்பார். அவரது மனைவி தொலைபேசியில் வேலை பார்த்து இந்த மாதம் தான் (ஜூலை 2017) 60 வயது தொட்டுள்ளார். அவர்களுக்கு ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீவித்யா என்று இரண்டு பிள்ளைகள். இருவருமே மிகவும் கெட்டிக்கார்கள். திருமணம் முடிந்து வாழ்வில் செட்டில் ஆகிவிட்டனர். திரு ஜானகிராமன் அவர்களது குடும்பமே ஜோதிட சாத்திரத்தில் வல்லவர்கள். பணி ஓய்வுக்குப் பிறகு பணம் செய்ய ஏதும் செய்யாமல் பிறரின் அல்லல் போக்கவும், நல்ல திருமணம் நடக்கவும் ஜோதிடத்தை கையில் எடுத்துள்ளார்.

 

அவர் தந்தை போல இவரும் ஓர் அம்பாள் உபாசகர். களையான முகம். சந்திரனைப் போல குளிர் முகம் அது. எப்போதும் புன்னகை. இவரை எப்படிப் பிடித்தார்களோ அண்மையில் வந்த வெற்றிப்படம் ‘ஜோக்கர் ‘ படத்தில் இவர் ப்ரெசிடெண்ட் பிரணாப் முகர்ஜியாக நடிக்கத் தேர்வு பெற்று அதில் மிகவும் அழகாக நடித்து உள்ளார். இவரது இளைய சகோதரர் ராஜாராமன் எனும் ராஜுவும் இந்தப் படத்தில் நடித்து உள்ளார். (இதனை எழுதும் இந்த நாள் மாண்பமை பிரணாப் முகர்ஜி ஓய்வு பெறுகிறார்)

 

திரு ஜானகிராமன் அவர்கள் என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் அளவு கடந்த பாசம் வைத்து இருப்பவர். எனது வெற்றிகள் கண்டு உள்ளபடியே மகிழ்ந்து பெருமைப்படுபவர் இவரே. இன்றும் உரத்த சிந்தனை அமைப்பில் இவர் பெயரில் ஒவ்வொரு ஆண்டு விழாவிலும் ஒரு விருது அளித்து வருகிறார். எங்கள் வீட்டிற்கு சமயம் கிடைத்த பொழுது வருவார். நானும் அவர் இல்லம் போவேன். நல்ல வாக்கு சுத்தம். அவர் சொன்னால் அது பலிக்கும். பலருக்கு நல்லது நடந்து இருக்கிறது. அண்மையில் அவர்க்கு திரு நல்லி செட்டியார் திருக்கரங்களால் விருது கிடைத்துள்ளது. ஏற்கனவே பல விருதுகள் பெற்றவர் இவர்.

 

இவரை நான் அறிந்து கொண்டதும், இவர் எனக்கு நல்ல நண்பர் ஆனதும், இவரால் நான் ‘திரு’ ஆனதும் இறைவன் செயலே. நன்றிகள் கோடி இங்கே சமர்ப்பிக்கிறேன்.

 

இவரிடம் நான் கற்றுக்கொண்டது: இவரது பொறுமை, புன்னகை, சிறந்த அன்புடன் கூடிய அணுகுமுறை, வாக்குசுத்தம், நேர மேலாண்மை, எளிமை, பேராசை அறியாத பண்பு, நல்ல பிள்ளை, நல்ல கணவர், நல்ல சகோதரன், நல்ல தந்தை, நல்ல நண்பர் என்று எல்லோரிடமும் பெயர் வாங்கும் சிறந்த பண்புகள், முன்னுதாரணமாக இருத்தல், கடிந்து பேசாது இருத்தல், குரு மற்றும் பெற்றோர் பக்தி, தொழில் சுத்தம், இறை சிந்தனை, பலருக்கு உதவும் மனம், கடின உழைப்பு, சுய ஒழுக்கம், எல்லோரையும் மதித்தல், இன்னும் பல உண்டு. இவரிடம் கற்க நான் தான் மேலும் நெருங்க வேண்டும்.

 

இவர் வணங்கும் அம்பாள் இவரை பல்லாண்டு ஆயுள் ஆரோக்கியத்தோடு சிறப்பாக வாழ வைத்து இவர் விரும்பும் பணிகளை செய்ய வைக்க வேண்டும் என்று மனதார சிரம் தாழ்த்தி பிரார்த்திக்கிறேன். வளர்க இவர் தம் தொண்டு.


Order Now