நான்காம் நாளான இன்று படிக்கட்டுக் கோலம் போடவேண்டும். தேவியை இன்று விஷ்ணுவின் அம்சமான வைஷ்ணவியாக சங்கு, சக்ர, கதாதாரியாக வழிபடவேண்டும். சிறு பெண் குழந்தையை இன்று “சுமங்கலி” என்னும் நாமத்தில் வழிபட்டு கல்கண்டு சாதமும், பச்சைப்பட்டாணிச் சுண்டலும் நிவேதனம் செய்யலாம்.

ஒரே உடலின் வலப்பக்கம் ஈசன் எனில் இடப்பக்கம் அம்பாள். அம்பாளின் நிறம் உதிக்கின்ற செங்கதிர்களைப் போன்ற சிவந்த நிறம் எனில் ஈசனின் நிறம் ஸ்படிகம் போன்றது. ஸ்படிகத்தின் அருகே வேறு நிறக்கற்களை வைத்தால் எவ்வாறு அது அந்தக் கல்லின் நிறத்தைத் தனதாக்கிக் கொள்கிறதோ அவ்வாறே அம்பாளைத் தன் இடப்பாகத்தில் வைத்த ஈசனும் மறைந்து போய் அம்பாளோடு ஐக்கியமாகி அவளாகவே ஆகிவிடுகிறான். ஆகவே தேவி வழிபாடே ஈசனுக்கும் உகந்ததாகிவிடுகிறது. இங்கே அவன் தேவியோடு ஐக்கியமாகித் தனக்கென ஒரு வடிவமும் இல்லாமல், தொழிலும் இல்லாமல் அவளாகவே ஆகிவிடுகின்றான்.

எவளை வழிபட்டால் அனைத்துத் தேவதைகளையும் வழிபட்டதற்குச் சமானம் ஆகிறதோ அந்த மூலப் பொருள் அம்பிகை. இவளே ஐந்து தொழில்களையும் நடத்துகிறாள் என்பதையும் ஏற்கெனவே பார்த்தோம். இதையே லலிதா சஹஸ்ரநாமமும்,

ஸ்ருஷ்டி கர்த்ரீ, ப்ரஹ்மரூபா, கோப்த்ரீ, கோவிந்த ரூபிணீ,
சம்ஹாரிணி, ருத்ரரூபா, திரோதானகரீஸ்வரீ, ஸதாசிவா அனுக்ரஹதா, பஞ்ச க்ருத்ய பராயணா!”

என்று கூறுகிறது.

மஹிஷாசுரனை வதம் செய்த தேவியைத் துதித்த தேவர்களிடம் அவர்களுக்குத் தேவையான சமயம் தான் திரும்பவும் தோன்றுவதாய்க் கூறி மறைகின்றாள். இனி ஸும்ப, நிஸும்பர்களின் வதத்தைப் பார்ப்போம். எல்லா அசுரர்களையும் போலவே ஸும்பன், நிஸும்பன் என்ற இரு சகோதரர்களும் தேவேந்திர பதவியைப் பறித்துக்கொண்டு மூவுலகையும் தங்களுக்குக் கீழே கொண்டு வந்தனர். ஆபத்தில் தன்னை நினைக்குமாறு கூறிச் சென்ற தேவியின் வாக்கு நினைவில் வர, தேவர்கள் இமயத்தை அடைந்து தேவியைத் துதித்தனர். பல்வேறு நாமங்களால் தேவியைத் துதித்துப் போற்றி வழிபட்டனர். தங்கள் கஷ்டங்களைக் களைய வந்திருக்கும் துர்காதேவி எனவும், ஜகத்தின் ஆதாரமும், இயக்கமும் அனைத்துமாக உள்ள தேவிக்கு நம்ஸ்காரங்கள் செய்தும் வழிபட்டனர். அனைத்து உயிர்களிலும் விஷ்ணு மாயை உருவத்தில் இருப்பவளும் அவளே எனக் கூறி வழிபட்டனர். இந்த வழிபாட்டு ஸ்லோகங்கள் அனைத்தும் தொகுக்கப் பட்டு 2008-ம் வருஷத்திய நவராத்திரிப் பதிவுகளில் காணலாம்.

“யாதேவி ஸர்வ பூதேஷூ விஷ்ணுமாயேதி சப்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:”

என்று ஆரம்பிக்கும். தேவர்கள் இங்கனம் தேவியைத் துதித்து வருகையில் பர்வத ராஜனின் மகளான பார்வதி அங்கு வந்து தேவர்களைப் பார்த்து, “என்ன?” என்று வினவ, அவளின் உடலில் இருந்து அப்போது மங்கள சொரூபியாக ஒரு பெண் தோன்றினாள். அம்பாளின் சரீர கோசத்திலிருந்து தோன்றிய அவளைக் கெளசிகீ என்பார்கள். சிவந்த அவள் வெளிவந்ததும் பார்வதியான அம்பாள் கறுப்பு நிறமடைந்து காலி(ளி)கை யானாள். கெளசிகீயின் அழகையும் நிறத்தையும் பார்த்து மோகித்தனர் சண்ட, முண்டர்கள் என்னும் அசுரத் தளபதிகள். இவர்கள் சும்ப, நிசும்பனின் படைத்தலைவர்கள். சும்ப, நிசும்பர்களைக் கண்டு கெளசிகீயின் அழகை வர்ணிக்கின்றனர். அவளைப் போன்ற உத்தமமான வடிவை எங்கும் கண்டதில்லை என்றும், அவளை அடையவேண்டியவர்கள் சும்ப, நிசும்பர்கள் தானே தவிர வேறு எவரும் இருக்கமுடியாது எனவும் சொன்னார்கள். அவளுடைய சிவந்த நிறம் உதய சூரியனின் கிரணங்களின் நிறத்தைத் தோற்கடிக்கக் கூடியதாகவும், எட்டுத் திசைகளையும் பிரகாசப் படுத்துவதாயும் இருப்பதாயும், கூறிவிட்டு, அவளுக்கு ஈடு, இணையாக இன்னொரு பெண் மூவுலகிலும் இல்லை என்கின்றனர்.

விலை மதிக்க முடியாத பல சொத்துக்களை சும்ப, நிசும்பர்கள் பெற்றிருப்பதாயும், அவை அனைத்தும் தேவாதி தேவர்களிடமிருந்தும், பிரம்மா, சமுத்திரராஜன், மற்றும் திக்கஜங்கள் போன்றவர்களிடமிருந்த விலை மதிக்க முடியாத பொருட்களும் சும்ப நிசும்பர்கள் பெற்றிருப்பதையும் எடுத்துக் காட்டினார்கள். அவ்வாறிருக்கையில் இவ்வளவு உத்தமமான ஸ்த்ரீ ரத்னம் இருக்கவேண்டிய இடம் இதுதான் என்றும் கூறினார்கள். சும்பன் இதைக் கேட்டுவிட்டு, தன் சபையில் இருந்த அசுரர்களில் சிறந்தவன் ஆன சுக்ரீவன் என்பவனைத் தூது அனுப்புகிறான். (ராமாயண சுக்ரீவனோடு குழப்பிக்கொள்ளவேண்டாம்). சுக்ரீவன் தேவியிடம் வந்து தன் இனிமையான சொற்களால் அவள் மனதை மாற்ற முயல்கின்றான். மூவுலகையும் ஆளும் ஈஸ்வரன் சும்பன் ஒருவனே என்றும் தேவர்கள் அனைவரையும் தன் கட்டளைக்குக் கீழ்ப்படிய வைத்திருக்கும் சும்பனைத் தவிர, மற்றவர் யார் எது கூறினாலும் கேட்கவேண்டாம் எனவும் தேவியிடம் கூறுகிறான். இவ்வுலகின் தலை சிறந்த ரத்தினங்கள் அனைத்தும் தன் வசம் வைத்திருக்கும் சும்பனிடமே இந்த ஸ்த்ரீரத்னம் இருக்கவேண்டிய இடம் என்றும் சுட்டிக் காட்டுகிறான். சும்பனைப் பிடிக்கவில்லை எனில் அவன் தம்பி நிசும்பனை ஏற்றுக்கொள்ளலாம் எனவும் சொல்கின்றான். இதை ஆலோசித்துக் கொண்டு சும்பனுக்கோ அல்லது நிசும்பனுக்கோ பத்தினியாக வந்து அடையுமாறு தேவிடம் சும்பன் தெரிவித்ததாய் சுக்ரீவன் கூறுகிறான்.

தேவி தன் முகத்தில் குமிண்சிரிப்புத் தெரிய, கூறிய பதில் என்னவெனில்:”உண்மைதான், சும்பனும் நிசும்பனும் பராக்கிரமசாலிகள் தான். ஆனால் நான் யாருக்குப் பத்தினியாகவேண்டும் என்பதற்கு ஏற்கெனவே ஒரு முடிவு எடுத்துவிட்டேன். அதை மாற்ற முடியாது. அந்தப் பிரதிக்ஞை என்னவெனில் என்னைப் போரில் வெல்லவேண்டும். போரில் என்னை வெல்பவர்களே எனக்குக் கணவன் என முடிவு செய்திருக்கிறேன். ஆகையால் சும்பனையோ, நிசும்பனையோ என்னோடு வந்து போர் புரியச் சொல். என்னை ஜெயித்துவிட்டுப் பின்னர் அடையட்டும்.“ என்கிறாள்.

தேவரெல்லாருமாய் ஸ்தோத்தரிக்கத்
தேவியும் பிரத்யக்ஷமாக வந்து
அஞ்சாதேயுங்கள் நீங்களென்று
அபயஹஸ்தங் கொடுத்தாள் தேவருக்கு.
ஹிமயபர்வதந்தன்னில் வந்து தேவி
கன்னிகாரூபமெடுத்துக்கொண்டு
கோகிலம் போலும் குரலுடையாள்
கொம்புத்தேன் போலும் மொழியுடையாள்
ஹம்ஸம்போலும் நடையுடையாள்
அபயங்கொடுக்கும் கரமுடையாள்
மன்மதன் கைக்கொண்ட விற்போலுமுள்ள
வளைந்த புருவச் சிலையழகும்
முத்துக்கோத்தாற்போல் பல்லொளியும்
பவழம் போன்ற அதரங்களும்
பட்டமுஞ்சுட்டியும் நெற்றிதன்னில் மின்ன
பதக்கம் சரப்பளி மார்பிலசைய,
தண்டைசிலம்பு கலகலவென்னக் காலில்
சிலம்பு கொஞ்சிச் சலுஞ்சலென்க
சொர்ணமயமான ஊஞ்சலில் இருந்து
கோடி சூரியர் உதித்தது போல்
தங்கத்தினாலான சங்கிலியைத் தொட்டு
தானே பாடிக்கொண்டு ஆடலுற்றாள்

சுக்கிரீவன் கேட்டு ஸந்தோஷமாய்
வெகு சீக்கிரமாகவே ஓடிவந்தான்
தேவியருகினில் கிட்ட வந்துமெள்ளச்
சேதியை நன்றாய் எடுத்துரைப்பான்.
சும்பநிசும்பனென்று இரண்டு பேர்
மூன்றுலகங்கட்டி யாண்டிருக்கார்
உமக்கு மெத்த அழகிஅருந்தும் நல்ல
போகபாக்கியம் புஜியாமல்
இந்த அதிரூப செளந்தரியத்துடன்
தனித்திருக்கின்ற காரியமேன்?
எங்கள் ராஜாவிற்கு ஏர்வையம்மா நீர்
இந்த க்ஷணத்தில் வாருமென்றான்
வாருமென்று அழைக்கவுமேயவன்
மஹேஸ்வரியுமேது சொல்வாள்
சபதமொன்றல்லவோ செய்திருக்கேன்
சத்தியமாகவே சொல்லுகிறேன்
சண்டையிட்டு என்னை ஜெயித்தவர்கள்
கொண்டு போகலாமென்று சொல்லி,
உங்கள் ராஜாவிற்குச் சொல்லுங்களென்று
உத்தரஞ்சொல்லி யனுப்பி வைத்தாள்

​Seeking Blessings from Devi​

S Ramachandran ( Chandru )

Order Now