நவராத்திரி இரண்டாம் நாளான இன்று அம்பிகையை வாராஹியாகச் சிலர் வழிபடுவார்கள். தன் தெற்றிப் பற்களால் பூமியைத் தாங்கும் இவளின் ஆயுதங்கள் சூலமும், உலக்கையும், தேவையற்ற போட்டி, பொறாமைகளில் இருந்து காக்கும் வல்லமை படைத்தவள். இன்று கட்டங்களால் ஆன கோலம் போட்டுச் சிறு பெண்ணை குமாரியாகப் பாவித்து வழிபட வேண்டும். இன்று சனிக்கிழமையாக இருப்பதால் எள் சாதமோ, தயிர்சாதமோ நிவேதனம் செய்யலாம். அ+உ+ம = ஓம் என்பது. அதுவே மாறி உ+அ+ம = உமா என தேவி பிரணவம் என்ற சிறப்பைப் பெற்றது. இதைத் தவிரவும் உ என்ற எழுத்துக்கு சிவன் என்றும் மா என்ற எழுத்து அவனின் சக்தியையும் குறிக்கும். மேலும் இந்தச் சக்திதான் நமக்கு சிவனை அடையாளமும் காட்டுகிறாள். நிறமற்றப் பரம்பொருளைத் தன் செந்நிறத்தால் அடையாளம் காட்டுகிறாள். இதையே அபிராமி பட்டரும், “உதிக்கின்ற செங்கதிர் “என்று கூறுகிறார். இவளுக்கு எல்லாமே மூன்று. தேவியின் பீஜாக்ஷரங்கள் மூன்று. அதனாலேயே த்ரிபுர சுந்தரி என்ற நாமத்தையும் பெற்றாள். த்ரிபுரம் என்பதே தேவியின் பீஜாக்ஷரங்களையே குறிக்கும். சிருஷ்டி(படைத்தல்), ஸ்திதி(காத்தல்), ஸம்ஹாரம் (அழித்தல்), திரோதானம் (மறைத்தல்), அனுகிரஹம் (அருளுதல்) என்னும் ஐந்து தொழில்களையும் தேவி முறையே பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஈசானன், ஸதாசிவன் ஆகியோர் மூலம் நடத்துகிறாள். இதையே லலிதா சஹஸ்ரநாமமும், “பஞ்ச க்ருத்ய பராயணா” என்று கூறுகிறது. முக்குணம் உள்ள மாயைக்கு ரஜோ குணம் மேலிட்டிருக்கும்போது பிரம்மா என்ற சைதன்யமும், ஸத்வ குணம் மேலிட்டிருக்கும்போது விஷ்ணு என்ற சைதன்யமும், தமோ குணம் மேலிட்டிருக்கும்போது ருத்ரன் என்ற சைதன்யமும் அதனுடன் சம்பந்தப் படுகிறது. இப்போ மஹிஷாசுரனைப் பத்திப் பார்ப்போமா? மஹிஷாசுரன் வாங்கிய வரங்களைக் கொண்டு நல்லாட்சி நடத்தாமல் அனைவரையும் துன்புறுத்தியே வந்தான். அவனுடைய அசுர வலிமையால் இந்திரலோகத்தில் இருந்து இந்திரனை விரட்டிவிட்டு மஹிஷாசுரன் தானே இந்திரன் என அறிவித்துக்கொண்டான். மேலும் திக் தேவதைகளின் அதிகாரங்களையும், சூரிய, சந்திரர்களைக் கட்டுப்படுத்தவும் ஆரம்பித்தான். ஆகவே மூவுலகிலும் நியதிகளில் மாறுபாடு ஏற்பட ஆரம்பித்தது. அவனுடைய கொடுங்கோன்மை கட்டுக்கடங்காமல் போகவே அனைவரும் ஈசனைச் சரண் அடைந்தனர். ஈசன் இது தேவி ஒருத்தியாலேயே நிகழக்கூடிய ஒன்று எனக் கூறித் தன் சக்தியில் இருந்து ஒரு மாபெரும் ஒளிப்பிழம்பைத் தோற்றுவித்தார். அவ்வாறே பிரம்மா, விஷ்ணுவும் அவரவர் சக்தியை ஒளிப்பிழம்பாய்த் தோற்றுவிக்க மூன்றும் ஒன்றாய்ச் சேர்ந்தது. இதைக் கண்ட தேவாதி தேவர்கள் தங்கள் பங்கும் இந்த நற்காரியத்திற்கு வேண்டும் என உறுதி கொண்டு அவரவர் சக்தியை வெளிப்படுத்த அனைத்தும் சேர்ந்து கோடி சூரியப் பிரகாசத்தைவிடவும் அதிகப் பிரகாசம் கொண்டதொரு ஜோதி ஸ்வரூபமாய் மாறி தனக்கு உவமையற்றதாய் விளங்கியது. ஒன்று சேர்ந்த அந்த ஜோதி ஒரு பெண்ணுருக் கொண்டது. ஈசனின் முகத்து ஒளியானது அந்தப் பெண்ணின் முகமாகவும், விஷ்ணுவின் ஒளியால் புஜங்களும், யமனின் ஒளியால் கேசமும், சந்திரனுடைய காந்தியால் மார்புகளும், இந்திரனுடைய காந்தியால் இடையும், வருண காந்தியால் தொடைகளும், முழங்கால்களும் தோன்றின. பூமியின் ஒளியானது பிருஷ்ட பாகமாய் மாறிற்று. பிரம்மாவின் ஒளியால் பாதங்கள், சூரிய ஒளியால் கால்விரல்கள், வசுக்களின் ஒளியால் கைவிரல்கள், குபேரனின் காந்தியால் மூக்கு, பிரஜாபதியின் ஒளியால் பல்வரிசைகள், அக்கினியின் ஒளியால் முக்கண்கள், சந்தியைகளின் ஒளியால் இரு புருவங்கள், வாயுவின் ஒளியால் காதுகள் தோன்றிற்று. மற்ற தேவர்களின் ஒளியால் மங்கள ஸ்வரூபமான தேவியின் ஆவிர்ப்பாவம் ஏற்பட்டது. பரமசிவன் திரிசூலத்தில் இருந்து தோற்றுவிக்கப் பட்ட ஒரு சூலத்தை அம்பிகைக்குக் கொடுக்க, விஷ்ணுவும் தன் சுதர்சனத்தில் இருந்து மற்றொரு சக்கரத்தை உண்டாக்கி அம்பிகைக்கு அளித்தார். வருணன் சங்கமும், அக்னி சக்தி ஆயுதமும் வாயு வில்லையும் பாணங்கள் நிறைந்த அம்புறாத் தூணியையும் அளிக்க, இந்திரன் தன்னுடைய வஜ்ஜிராயுதத்தையும், ஐராவதத்தில் இருந்து தோன்றிய மணியையும் அளிக்கிறான். யமனின் கால தண்டத்திலிருந்து ஒரு தண்டத்தையும், வருணன் பாசத்தையும், பிரஜாபதி அக்ஷமாலையையும், கமண்டலுவையும் அளித்தனர். சூரியனின் கிரணங்களால் அவள் உடலின் காந்தி ஒளிவிட்டுப் பிரகாசித்தது. காலன் சுத்தியையும், கேடயத்தையும் அளிக்க, பாற்கடலரசன் ஹாரத்தையும் எப்போதும் புதிதான வஸ்திரங்களையும் கொடுக்கிறான். இவ்வாறே மற்ற தேவர்களும் ஒப்புயுர்வற்ற ஆபரணங்களையும், ஆயுதங்களையும் அளிக்கின்றனர். விஸ்வகர்மா பிளக்க முடியாத கவசங்களையும், ஹிமவான் சிம்ம வாகனத்தையும் நவரத்தினங்களையும் அளிக்கிறான். ஆதிசேஷன் நாகஹாரத்தைக் கொடுத்தான். தேவி அனைத்தையும் பெற்றுக்கொள்கிறாள். இவ்வாறு உபசாரங்கள் செய்யப் பட்டதில் மனம் மகிழ்ந்து சிம்ம வாஹனத்தில் அமர்ந்த வண்ணம் “அட்டஹாசம்” என்னும் சிரிப்பைத் தர அண்டசராசரமும் நடுங்கியது. தேவர்கள் ஜயகோஷம் எழுப்பினர். மஹிஷனை வதைக்க தேவி கிளம்பினாள். மஹிஷ அசுரன் என்னும் ஒருத்தன் தபஸுமிகப்பண்ணி வரமடைந்தான் ஜகத்திலுள்ளோரை உபத்திரவிக்க அஸுரன் தேவர்கள் ரிஷிகளெல்லோருங்கூடி, கைலாசத்திற்கு ஓடி வந்தெல்லோரும் அறிவித்தாள் மஹாதேவருக்கும் சிவனுடைய ஸந்நிதியில் நின்று தேவி மஹிமை சொல்லி ஸ்துதித்தாள். தேவாளுடைய முகத்திலிருந்தம்மன் தேஜோரூபமாய் ஒன்று சேர்த்து அத்தனை பேர்களின் தேஜசைக் கிரஹித்து அம்மன் பிரத்தியக்ஷமாக வந்தாள் அத்தனை தேவர்களும் பணிந்து தங்கள் ஆயுதமும் தேவி கைகொடுத்தாள் பக்தியாய் ஆயுதமுங்கொடுக்க அம்மன் பதினெட்டுக் கையிலும் தரித்துக்கொண்டு, சிம்ஹவாஹனத்தில் ஏறிக்கொண்டாள் மஹா தேவியும் யுத்தம் பண்ண வந்தாள் மஹிஷாஸுரனும் தேவியுமாய் மஹா ஆங்காரமாய் யுத்தம் பண்ணலுற்றார்.

Order Now