முதலில் தொடருவதற்கு முன்னால் ஒரு விஷயம் தெளிவாக்குகிறேன். இந்த லலிதாம்பாள் சோபனம் முழுவதையும் நான் எழுதி விளக்குவதென்றால் குறைந்த பக்ஷமாய் மூன்று மாதங்களாவது ஆகும். நான் எழுதுவதற்கும் விளக்கவும் அவ்வளவு நாட்கள் பிடிக்கும். முதலில் நான் புரிந்து கொண்டவை சரியா எனப் பார்த்துத் தப்பானவற்றைத் திருத்திக்கொள்ள வேண்டும். அதோடு நடு நடுவே வரும் புராணக் கதைகளை விளக்கும்படி இருக்கும். ஆகவே பல நாட்கள் ஆகும். நவராத்திரிக்குள் முடியாது என்பதால் தேவியின் புராணத்தைச் சுருக்கமாகவே தரப் போகிறேன்.

“ஆதியந்தம் பராசக்திக்கில்லை
ஆதாரமுஞ் ஜகத்துக்கிவள் தான்
ஜோதி ரூபியுடைய ரூபங்களை யெல்லாம்
சொல்ல முடியாதொருவராலே
ஆனாலும் தெரிந்த மட்டுக்குமிப்போ
அவளுடைய சில அவதாரஞ் சொல்வோம்
முன்னே பிரம்மாவின் தியானத்தில் ரக்ஷிக்க
முதல் வந்தாள் ஒரு ரூபம் – சோபனம் சோபனம்!

எப்போது தோன்றினாள் என்று சொல்ல முடியாத அளவுக்குப் பழையோள் ஆன பராசக்தியே இந்த ஜகத்துக்கு ஆதாரம். நாம் அனைவரும் அவளுடைய கர்ப்பத்தில் இருக்கும் சிசுக்களே. அவளுடைய ரூபங்களையும் அவள் எடுத்திருக்கும் வடிவங்களையும் அவதாரங்களையும் சாமானிய மானுடர்களான நமக்கு எடுத்துச் சொல்ல முடியாது.

இவளே மஹா மாயை, அதனால் பிரபஞ்சத்தின் இருப்பிற்குக் காரணமாகிறாள். இவளே ஸ்ரீஹரியின் யோக நித்திராதேவி. அதனாலேயே அவளால் இவ்வுலகம் மயக்கப் படுகிறது. சேதனமும் அவளே, அசேதனமும் அவளே! அவளே ஸ்ரீவித்யா, அவளே முக்திக்கு வித்து! என்றுமுள்ளவள்.

ஈஸ்வரர்களுக்கெல்லாம் ஈஸ்வரி அவளே! உலகே அவள் உருவான புவனேஸ்வரியும் அவளே. தேவர்களின் காரிய சித்திக்காக அவள் எப்போது ஆவிர்ப்பவிக்கின்றாளோ அப்போது அவள் இவ்வுலகில் உற்பவித்ததாய்ச் சொல்லப் படுகிறது.

“சிதக்னி-குண்ட-ஸம்பூதா-தேவ காரிய –ஸமுத்யதா” என்று சொல்கிறது லலிதா சஹஸ்ரநாமாவளி. அப்படி ஒரு கல்பமுடிவில் மஹாவிஷ்ணுவின் யோக நித்திரையில்போது தோன்றிய இரு அரக்கர்கள் மதுகைடபர்கள் என்ற பெயருள்ளவர்கள். உக்கிர வடிவோடு தோன்றிய அவ்விரு அசுரர்களும் பிரம்மாவையும் கொல்ல முயல, அவரோ உலகநாயகியான தேவியைத் துதித்தார்.

அழிவற்ற, நித்தியமான, ப்ரணவஸ்வரூபியான தேவியை, அம்ருத ரூபிணி, அவளே ஸ்வாஹா, அவளே ஸ்வதா, அவளே ஸந்தி, அவளே சாவித்ரி, அவளே காயத்ரி என்றெல்லாம் துதித்தார்.

திருப்பாற்கடல் தன்னில் ஸ்ரீஹரியும்
சேஷ சயனத்தில் பள்ளி கொண்டார்
மஹாவிஷ்ணுவின் கர்ணங்களிலிருந்து
மதுகைடபர் இருவர் உண்டானார்-சோபனம், சோபனம்

விழித்துப் பார்த்தங்கே பிரம்மாவை அவர்கள்
முஷ்டியுத்தம் பண்ண வந்தெதிர்த்தார்
அயனுங்கண்டு பயந்து கொண்டு ஸ்ரீ
ஹரியை வந்து நமஸ்கரித்தார்.
நினைவு தெரியாது விஷ்ணுவுமப்போ
நித்திரையின் வசப்பட்டிருந்தார்
அம்மா தேவி நித்திராமோஹினியே பொல்லா
அஸுராள் பயத்தால் ஹரியிடம் வந்தேன்
மோஹினியே ஜகன்மாதாவே மஹாவிஷ்ணுவை
விட்டு வெளியேறம்மா – சோபனம், சோபனம்

என்று லோக மோஹினி மஹிமைதனைச்
சொல்லி நான்கு முகவரும் ஸ்தோத்தரிக்க
பகவானுடைய சரீரத்தினை விட்டுப் (தேவி)
பிரத்யக்ஷமாக எதிரில் வந்து
வேண்டும் வரத்தைக் கொடுத்துப் பிரம்மாவுக்கு
விச்வமோஹினியும் மறைந்தாள். – சோபனம், சோபனம்

மஹாவிஷ்ணு நித்திராதேவி தன்னை விட்டு அகன்றதும் கண் விழித்துப் பார்க்கவும் மதுகைடபர்களைக் கண்டு அவர்களோடு போர் புரிந்தார். பல்லாண்டுகள் போர் புரிந்தும் அவர்களை அவரால் கொல்ல முடியவில்லை. மதுகைடபர்கள், விஷ்ணுவிற்கு வரங்கள் அளிப்பதாயும், வேண்டும் வரங்களைக் கேட்குமாறும் கூற, அவரும் அவர்கள் இருவரும் தம்மால் கொல்லப்படவேண்டுமேயன்றி வேறு வரங்கள் தேவையில்லை என்றார்.

பிரளய மஹாகாலமான அந்தக் கால கட்டத்தில் அனைத்து உயிர்களும் ஒடுங்க வேண்டிய வேளையில் இவர்கள் இருவரையும் ஒடுக்கவேண்டியே மஹாவிஷ்ணு பிரயத்தனப் பட்டார். எங்கும் நீர்ப்பிரவாகமாய் இருக்கக்கண்ட மதுகைடபர்கள் பூமியானது தண்ணீரில் முழுகாமல் இருக்கும் இடத்தில் தங்களைக் கொல்லுமாறு கூற, மஹாவிஷ்ணுவும் அவர்களைத் தம் தொடையில் இருத்திக்கொண்டு சக்கரத்தால் கொன்றார்.

இவ்வாறு பிரம்மாவால் துதிக்கப் பெற்ற யோக நித்திராதேவி தானாகவே தன்னைத் தோற்றுவித்துக் கொண்டு மஹாவிஷ்ணுவின் மூலம் மதுகைடபர்களை பிரளயத்தில் ஒடுங்கச் செய்தாள். ஆதி சக்தியானவள் தன்னிடமிருந்த முக்குணங்களின் மூலம், மஹாலக்ஷ்மி, மஹா சரஸ்வதி, மஹாகாளி, ஆகிய மூன்று வடிவங்களைத் தோற்றுவிக்கிறாள்.

பிரம்மபத்தினியாகச் சொல்லப் படும் சரஸ்வதி வடிவத்திற்கும் இவளுக்கும் வேறுபாடு உண்டு. இவள் பராசக்தியின் வடிவினின்று வேறுபட்டவள் அல்ல. இந்த ஆதி மஹாசரஸ்வதியே ஆதி பராசக்தி, ஆதிலக்ஷ்மி ஆவாள். இதையே லலிதா சஹஸ்ரநாமாவளியும், ஸ்ருஷ்டிகர்த்தா, பிரஹ்மரூபி, கோப்த்ர்யை, கோவிந்த ரூபிண்யை, சம்ஹாரிண்யை, ருத்ரரூபாயை, திரோதான கர்யை, ஈஸ்வர்யை என்றெல்லாம் கூறுகிறது.

இந்த மதுகைடப வதத்திற்கு அடுத்து வரப்போவது மஹிஷாசுர வதம்.

நவராத்திரி முதல்நாளான இன்று சிலர் அம்பிகையைச் சாமுண்டியாக வழிபடுகின்றனர். சண்ட, முண்டர்களை வதம் செய்த தேவியே சாமுண்டி. நாம் ஆனால் இவளை வரிசைக்கிரமமாகவே பார்க்கப் போவதால் இது பின்னர் வரும். இன்றைய நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல், புட்டு. இன்று பொட்டுக் கோலம் போட்டு அம்பிகையை “பாலை”யாக வழிபடவேண்டும்.

தசமஹாவித்யையின் முதல் தேவியான காலி என்னும் காலத்தைக் குறிக்கும் தேவியின் படத்தை மேலே காணலாம். காலி தான் தமிழில் காளி என்று அழைக்கப் படுகிறாள்.


Order Now